நினைவிழந்து வென்டிலேட்டரில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்
சாலை விபத்தில் சிக்கி, தலையில் ஏற்பட்ட காயத்தால் நினைவிழந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணி, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பலதுறை மருத்துவர்களின் ஒருங்கிணைப்புடன், நினைவிழந்த நிலையில் கோமாவில் இருந்த கர்ப்பிணிக்கு, கருவியில் இருக்கும் சிசுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சிகிச்சை அளித்து, சிசேரியன் முறையில் குழந்தை பிறந்துள்ளது.
தாயும், சேயும் தற்போது நலமாக இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நொய்டாவைச் சேர்ந்தவர் நந்தினி திவாரி, பிரசவத்துக்குப் பிறகு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது வென்டிலேட்டரிலிருந்து விடுவிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விரைவாகக் குணமடைந்து வருகிறார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரிக்சாவில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி நந்தினி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிடி ஸ்கேன் சோதனையில் மூளையின் வலது பக்கம் ரத்தம் கட்டி, வீங்கியிருந்ததால் நினைவிழந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அப்போது அவர் 39 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. ஆண் குழந்தை உடனடியாக குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பிறகு ஆறு நாள்கள் வென்டிலேட்டர் உதவியோடு கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் குணமடைந்துள்ளார். பிறகு அவருக்கு நினைவுதிரும்பியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட நந்தினியின் கணவர், முதல் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதாகக் கலங்கியபடி சொல்கிறார்.