தமிழக ஐஏஎஸ் கார்த்திகேயன் பாண்டியனுக்கு அமைச்சர் அந்தஸ்தில் பதவி!

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், அமைச்சர் அந்தஸ்திலான பதவியில் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 23 ஆண்டு கால ஆட்சியில், பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் பட்நாயக்குடன் காணப்படும் இவர், அமைச்சர்கள் கூட, முதல்வரை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் கொண்டவராக வலம்வந்தார்.

மேலும், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில், ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், விருப்ப ஓய்வு விண்ணப்பித்த அடுத்த நாளே மாநில அமைச்சர் வகிக்கக் கூடிய பதவியில் விகே பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஒடிசா அரசு வெளியிட்ட அறிவிப்பில், நவீன ஒடிசா உள்ளிட்ட திட்டங்களின் தலைவராக நியமிக்கப்படுவதாகவும், மாநில அமைச்சர் அந்தஸ்தில் ஒடிசா முதல்வரின் கீழ் நேரடியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் ஒடிசா அரசியலில் நேரடியாக விகே கார்த்திகேயன் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.