பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் தென் ஆபிரிக்கா 149 ஓட்டங்களால் மிகவும் இலகுவான வெற்றி.
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கிண்ண 23ஆவது லீக் போட்டியில் தென் ஆபிரிக்கா 149 ஓட்டங்களால் மிகவும் இலகுவான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் தனது 5 போட்டிகளில் 4 வெற்றிகளை ஈட்டியுள்ள தென் ஆபிரிக்கா அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வித்தியாச அடிப்படையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
குவின்டன் டி கொக் குவித்த அதிரடி சதம், ஹென்றிச் க்ளாசென் குவித்த அதிரடி அரைச் சதம், பதில் அணித் தலைவர் ஏய்டன் மார்க் ராம் பெற்ற அரைச்சதம் மற்றும் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன தென் ஆபிரிக்காவை இலகுவாக வெற்றிபெறச்செய்தன.
எவ்வாறாயினும் பங்களாதேஷ் வீரர் மஹ்முதுல்லா மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சதம் குவித்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார். உலகக் கிண்ண போட்டி வரலாற்றில் மஹ்முதுல்லா குவித்த 3ஆவது சதம் இதுவாகும்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா, 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 382 ஓட்டங்களைக் குவித்தது.
முதல் 8 ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததால் தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. (36 – 2) அத்துடன் முதலாவது பவர் ப்ளேயில் தென் ஆபிரிக்கா 2 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், குவின்டன் டி கொக், எய்டன் மார்க்ராம், ஹென்ரிச் க்ளாசென் ஆகியோர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவை மிகவும் பலமான நிலையில் இட்டனர்.
இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களில் பங்காற்றிய குவின்டன் டி கொக் 140 பந்துகளில் 15 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 174 ஓட்டங்களை விளாசினார். இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவர் குவித்த 3ஆவது சதமாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பெற்ற 20ஆவது சதமாகும்.
இதனிடையே 3ஆவது விக்கெட்டில் ஏய்டன் மார்க்ராமுடன் 131 ஓட்டங்களைப் பகிர்ந்த குவின்டன் டி கொக், 4ஆவது விக்கெட்டில் ஹென்றிச் க்ளாசெனுடன் மேலும் 142 ஓட்டங்களைப் பகிர்ந்தார். குவின்டன் டி கொக் 4ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் ஏய்டன் மார்க்ராமும் ஹென்றிச் க்ளாசெனும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 5ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அத்துடன் கடைசி 10 ஓவர்களில் தென் ஆபிரிக்கா 144 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி 10 ஓவர்களில் தென் ஆபிரிக்கா 143 ஓட்டங்களைக் குவித்திருந்தது. ஏய்டன் மார்க்ராம் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஹென்றிச் க்ளாசென் 49 பந்துகளில் 8 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் மில்லர் 15 பந்துகளில் 4 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி அடங்கலாக 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்து வீச்சில் ஹசன் மஹ்முத் 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
மிகவும் கடினமான 382 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 46.4ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் பவர் பிளேயின்போது 8 பந்துகள் இடைவெளியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால் பங்களாதேஷ் பெரும் தடுமாற்றம் அடைந்தது.
தொடர்ந்து சீரான இடைவெளியில் மேலும் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட பங்களாதேஷ் 22 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்வரிசையில் லிட்டன் தாஸ் (22) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். எவ்வாறாயினும் மஹ்முதுல்லா 3 இணைப்பாட்டங்களில் பங்காற்றி பங்களாதேஷை கௌரவமான நிலையில் இட்டார்.
மஹ்முதுல்லா 111 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 111 ஓட்டங்களைப் பெற்றார். பத்தாம் இலக்க வீரர் முஸ்தாபிஸுர் ரஹ்மானின் ஒத்துழைப்புடன் சதம் குவித்த மஹ்முதுல்லா, 9ஆவது விக்கெட்டில் அவருடன் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தார். முஸ்தாபிஸுர் ரஹ்மான் 11 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
அதற்கு முன்பதாக 7ஆவது விக்கெட்டில் 19 ஓட்டங்களைப் பெற்ற நசும் அஹ்மத்துடன் 41 ஓட்டங்களையும் 15 ஓட்டங்களைப் பெற்ற ஹசன் மஹ்முதுடன் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களையும் மஹ்முதுல்லா பகிர்ந்திருந்தார். பந்துவீச்சில் ஜெரால்ட் கொயெட்சே 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சென் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லிஸாட் வில்லியம்ஸ் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.