குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது
குடிபோதையில் ரகளை போலீசாரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டுக்காக பிரபல நடிகர் விநாயகத்தை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவரின் சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகம் அவரது மனைவியுடன் சண்டையிட்டதாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்கு குடியிருப்பு பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் விநாயகத்தின் வீட்டுக்கு வந்த காவலர்கள் விசாரணை நடத்திய பிறகு இருவரையும் வியாழக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் கொடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையம் வந்த விநாயகன், அங்கிருந்த காவல் அதிகாரியை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், காவல் நிலையத்தில் அமர்ந்து புகைப்பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அதில், மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவலர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக வழக்குப் பதிந்து விநாயகத்தை கைது செய்தனர்.
இதையடுத்து இரவு 10.30 மணியளவில் விநாயகத்தை ஜாமீனில் விடுவித்ததாக எர்ணாகுளம் வடக்கு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.