காசா மீது தரைவழி தாக்குதலை துவக்கியது இஸ்ரேல்.
இஸ்ரேல் காசாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. நேற்று இரவு காசா மீது கடுமையான விமான வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி இருந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் காலாட்படையும், கவசப் படையும் ஈடுபட்டு இருந்தன. குறிப்பாக ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி இருந்தது. இன்றும் நடத்தி வருகிறது. முக்கிய தாக்குதலை துவக்குவதற்கு முன்பு, இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை விட இந்த தாக்குதல் கடுமையாக இருந்ததாக இஸ்ரேல் ராணுவ வீடியோ தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனம் பகுதியிலும் உயிரிழந்தவர்களை ஒட்டு மொத்தமாக புதைக்கும் நடவடிக்கைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
பாலஸ்தீன அகதிகளுக்காக பேசிய ஐக்கிய நாடுகள் சபை நேற்று இஸ்ரேலை எச்சரித்து இருந்தது. எரிபொருளை உடனடியாக வழங்காவிட்டால், காசா பகுதி முழுவதும் நிவாரணப் பணிகள் தடைபடும் என்று தெரிவித்து இருந்தது.
இஸ்ரேல் – காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இதுவரை நடந்த ஐந்து போர்களில் இந்தப் போர் மிகவும் கொடியது என்று தெரிய வந்துள்ளது. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 6,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக உள்ளனர். பிணைக் கைதிகளில் நான்கு பெண்களைஹமாஸ் தீவிரவாதிகள் இந்த வாரம் விடுவித்து இருந்தனர். தங்களை எப்படி சுரங்கத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் வைத்து இருந்தனர் என்பதை அந்தப் பெண்கள் விவரித்து இருந்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிவிக்கு அளித்திருந்த பேட்டியில், ”ஏற்கனவே இஸ்ரேல் ஆயிரக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகளைக் கொன்றுள்ளது. இது ஆரம்பம்தான். அதேசமயம் நாங்கள் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தம் ஆகி வருகிறோம். ஆனால், எப்போது, எங்கு, எப்படி என்பதை நான் தற்போது கூற மாட்டேன்” என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று காசா மீது தரைவழி தாக்குதல் துவங்கப்பட்டு இருக்கிறது.