2 நாள் பயணமாக சென்னை வந்த குடியரசு தலைவர்.. முதலமைச்சர் வரவேற்பு!
2 நாள் பயணமாக சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கர்நாடக மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ரவி வரவேற்றார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை வரவேற்றார். அப்போது மணிமேகலை காப்பியத்தின் ஆங்கில பதிப்பை அவருக்கு பரிசாக வழங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திரவுபதி முர்மு தங்கினார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் முக்கிய பிரமுகர்களை திரவுபதி முர்மு சந்திக்கிறார். பின்னர், அங்கிருந்து சாலைமார்க்கமாக புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலை 10.15 மணி முதல் 11.15 மணிவரை நடைபெறும் 8-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 11.55 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும் முர்முவுக்கு.
தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுகிறது. அதன்பின்னர், நண்பகல் 12.05 மணியளவில் இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி, சென்னையில் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, ஆளுநர் மாளிகையில் வழக்கமாக 170 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 50 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பெட்ரோல் குண்டு தாக்குதலை அடுத்து உதவி ஆணையர் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.