போரில் கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்!
கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் இணைந்து இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்தப் போரில் அக்டோபர் 26-ம் தேதி வரை 24 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறது `Committee to Protect Journalists’ என்ற அமைப்பு.
24 பத்திரிகையாளர்களில், 20 பாலஸ்தீனியர்கள், மூன்று இஸ்ரேலியர்களோடு, லெபனானைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். `மூன்று பத்திரிகையாளர்களைக் காணவில்லை’ என்றும், `எட்டுப் பத்திரிகையாளர்கள் காயமடைந்தி ருக்கின்றனர்’ என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும், `மிடில் ஈஸ்ட் மானிட்டர்’ என்ற ஊடகத்துக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான யாரா ஈத் என்பவர், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்துப் பேட்டியளித்திருந்தார்.
இதையடுத்து, `யாரா ஈத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 15 பேரை இஸ்ரேல் விமானப் படை கொலைசெய்திருக்கிறது. இந்தச் செய்தியறிந்த 23 வயதுடைய யாரா, சுயநினைவை இழந்து மயக்கத்திலிருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தது `மிடில் ஈஸ்ட் மானிட்டர்.
அதேபோல, `அல் ஜசீரா’ ஊடகத்தின் பத்திரிகையாளர் Wael Dahdouh-ன் மனைவி, மகன், மகள், பேரன் ஆகியோர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொடூரமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர்.