கிரிமினல் குற்றமாகும் திருமணத்தை மீறிய உறவு? வெளியான தகவல்!
திருமணத்தை மீறிய உறவு, கிரிமினல் குற்றமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவின் படி, மனைவி மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், கணவர் அந்த நபர் மீது புகார் அளிக்க முடியும். புகார் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க வகை செய்கிறது.
ஆனால், ஒரு பெண் தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க இந்த சட்டத்தில் வழி இல்லை.
ஆங்கிலேயர் காலத்தில் செயல்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் மறுசீரமைப்பு, மற்றும் பல திருத்தங்களையும் செய்துள்ளது.
அதன் அடிப்படையில், 3 மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், அதனை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழு திருமணத்தை மீறிய ஆண் – பெண் உறவு மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை கிரிமினல் குற்றமாக மீண்டும் அறிவிக்க பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்த இரண்டு குற்றங்களும் கிரிமினல் குற்றங்களில் சேராது என, 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.