அமைச்சரவை மீண்டும் மாற்றம்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மோதல் வலுத்துள்ள நிலையில் வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்பாக அமைச்சரவையில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வரவு – செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்கு மொட்டுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், சில புதிய முகங்கள் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. .
இதனிடையே, அமைச்சுப் பதவிகளை மாற்றுவதற்கான யோசனைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பத்து பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களின்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுமாயின் வரவு – செலவுத் திட்டத்தில் அல்லது நெருக்கடி நிலைமையின் போது அரசுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.