பணயக் கைதிகளை விடுவிக்க கத்தாரின் உதவியை நாடும் உலக நாடுகள்
தெற்கு இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பிடித்துச் சென்ற விவகாரம் பெட்ரோல் வளமிக்க சிறிய நாடான கத்தாரை சர்வதேச ராஜ்ஜீய உறவுகளின் மையத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த பணயக் கைதிகளின் எதிர்காலம் ஓரளவுக்கு கத்தாரின் கைகளில் உள்ளது. இஸ்ரேலுக்கும் அதன் பரம எதிரியான ஹமாஸுக்கும் இடையில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக கத்தார் திகழ்கிறது.
பணயக் கைதிகள் நான்கு பேர் விடுவிக்கப்பட்டத்தில் கத்தாருக்கும் அதன் அமீருக்கும் உள்ள பங்கை பாராட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நேரம், பொறுமை மற்றும் தொடர் முயற்சிகள் மூலம் எதிர்காலத்தில் மேலும் சில பணயக் கைதிகளை விடுவிப்பதில் வெற்றி பெறலாம் என்று கத்தார் நம்புகிறது. அதேநேரம், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் எந்தவொரு தரைவழித் தாக்குதலும் பணயக் கைதிகளை விடுவிப்பதை மேலும் கடினமாக்கவும் கூடும்.