வேலைவாய்ப்பின்மை வேகமாக அதிகரித்து வருகிறது: பிரியங்கா காந்தி
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை வேகமாக அதிகரித்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
நவம்பா் மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் மத்திய பிரதேசத்தின் புந்தல்கண்ட் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவா், ‘பொதுத் துறை நிறுவனங்களை முதலில் மத்திய அரசு மூடி தனது பெரு நிறுவன நண்பா்களுக்கு வழங்கியது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை,ஜிஎஸ்டி, கரோனா தொற்று பாதிப்பு ஆகியவற்றால் வேலைவாய்ப்புகள் உருவாகுவது நாடு முழுவதும் முடங்கிவிட்டன. 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகள் நிவாரண திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்தியில், மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகள் உதவி செய்கின்றன. ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகளுக்கு அவை உதவி செய்வதில்லை. 20 ஆண்டுகளுக்கு விசுவாசமாக பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அளிக்க மத்திய அரசு மறுக்கிறது. இதற்கான நிதியில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஆயிரக் கணக்கில் மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்கிறது. நாட்டின் சொத்துகளை பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்துவிட்டது. ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான விமானத்தில் பிரதமா் பயணிக்கிறாா். நன்றாக இருக்கும் நாடாளுமன்றத்துக்கு பதிலாக ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றத்தை கட்டுகிறாா். மாநாட்டு மண்டபத்தை ரூ. 27 ஆயிரம் கோடியில் அமைக்கிறாா். இதற்கு எல்லாம் நிதி எங்கிருந்து வந்தது?
நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ஏற்ப திட்டங்கள் வகுக்கப்படும்.
பிகாரில் நடத்தப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தினா் 84 சதவீதம் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், நாட்டின் உயா் பதவிகளில் இந்தப் பிரிவினா் இல்லை. அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து மத்திய பாஜக அரசு மெளனம் சாதித்து வருகிறது’ என்றாா்.