ஏமாற்றமடைந்த டலஸ் சஜித்துடன் பேச்சு நடத்த முடிவு!
எதிர்க்கட்சிகளின் பொது அரசியல் கூட்டணியை உருவாக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும தலைமையில் பேச்சுகளை முன்னெடுக்கவும், சுயேச்சையான தீர்மானங்களை எடுக்கவும் சுதந்திர மக்கள் சபை கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியுடன் போட்டியிடுவது தொடர்பில் சுதந்திர மக்கள் சபை கவனம் செலுத்தியுள்ளதுடன் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்தப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியுடன் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னர் கூட்டணியின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து சுதந்திர மக்கள் சபைக்கு அறிவிப்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளில் பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அதற்காக சுதந்திர மக்கள் சபை என்ற கட்சியை உருவாக்கியுள்ளதுடன் எதிர்க்கட்சிகளுடன் பல கட்ட பேச்சுகளையும் நடத்தியுள்ளார்.
இருப்பினும் சஜித் பிரேமதாஸவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதற்கு டலஸ் அணியுடனான பேச்சுக்குத் தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே டலஸ் தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது.