பொன்சேகாவின் பதவியை பறிக்கத் தயாராகும் சஜித்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அக்கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஆயத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனத் தெரியவருகின்றது.
சரத் பொன்சேகாவை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்குக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை நியமிக்க கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆலோசனை நடத்தியுள்ளார்.
சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சியின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார் என்று கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பல்வேறு இரகசிய நகர்வுகளில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாலேயே கட்சிக்குள் பொன்சேகாவின் பதவியைப் பறிக்க வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியுடன் பொன்சேகா நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றார் என்று பொன்சேகாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.