மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம் – யாழ். ஆனைக்கோட்டையில் சோகம்.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே நேற்று (29) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்த இளைஞர் கரம் சுண்டல் விற்பனை செய்யும் வண்டில் ஒன்றைத் தயாரித்து, அதற்கு மின்சார வேலைகள் செய்துவிட்டு, மின்சார இணைப்பை வழங்கியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.