“தொடரும் ரயில் விபத்து கவலையளிக்கிறது” – மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பது கவலை அளிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கிச் சென்ற சிறப்பு பயணிகள் ரயில், சிக்னல் கிடைக்காததால் கோத்சவத்சாலா அருகே தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் வந்த விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இருள் சூழ்ந்த பகுதியில் விபத்து ஏற்பட்டதாலும், மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததாலும், பயணிகள் செய்வதறியாது தவித்தனர். பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள், துரிதமாகச் சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். தகவலறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் ஏற்பட்ட பாலசோர் ரயில் விபத்தை சுட்டிக்காட்டிய அவர், பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் பயணத்திற்காக நம்பியுள்ள ரயில்வேயில் அடுத்தடுத்து விபத்துகள் நடப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளார். ரயில் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை உடனடியாக மறுமதிப்பீடு செய்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
ரயில் பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.