பாலஸ்தீன மக்களின் அவலம் மாறுமா? : சுவிசிலிருந்து சண் தவராஜா
காஸா மக்களின் துயரம் மூன்று வாரங்களையும் கடந்து தொடர்கிறது.
56 வருடங்களாக சொந்த வாழ்விடத்தில் ஏதிலிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகி வாழும் நிலையில் தற்போதைய நிலை அவர்களை மேலும் துயர வாழ்வுக்குள் தள்ளியுள்ளது.
காஸா பிராந்தியத்தில் வாழும் 2.2 மில்லியன் மக்களில் 1.4 மில்லியன் மக்கள் ஏற்கனவே உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக உள்ள நிலையில் ஒக்டோபர் 13ஆம் திகதி இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை மேலும் மேலும் மக்களை இடம்பெயரச் செய்வதாக உள்ளது. தற்போது புதிதாக இடம்பெயர்ந்துள்ள 590,000 மக்கள் அவசர தங்குமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 150 இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
உணவு, குடிநீர், மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் காஸா பிராந்தியத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதை இஸ்ரேலிய படைத் துறை தடை செய்துள்ள நிலையில் காஸா மக்களின் எதிர்கால வாழ்வு தொடர்பான அச்சநிலை உருவாகி உள்ளது. இந்தக் கட்டுரை எழுதப்படும் போது தற்போதைய மோதலில் காஸா பிராந்தியத்தில் 8,000 வரை கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. கொல்லப்பட்டோரில் அநேகர் சிறார்களும் பெண்களும் ஆவர்.
இதேவேளை ஒக்டோபர் 7ஆம் திகதிய தாக்குதலின் பின்னான காலப்பகுதியில் ஐ.நா. பாதுகாப்புச் சபை காஸா விடயம் தொடர்பாக இரண்டாவது தடவை கூடி விவாதித்துள்ளது.
இதன்போது பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ரோனியோ குற்றரஸ், காஸாவில் பன்னாட்டு மனிதாபிமான விதிகள் மீறப்படுவது தொடர்பில் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். “நான் ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் இருந்து விதிவிலக்குப் பெற்றவையல்ல” எனக் கூறியுள்ள அவர் “ஹமாஸ் நடத்திய தாக்குதல் சூனியத்தில் இருந்து பிறந்ததல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்று இஸ்ரேலுக்கு சினத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றரஸ் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதுவர் கிலாட் எர்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, அவருடனான தனது திட்டமிட்ட சந்திப்பை ரத்துச் செய்துள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் எலி கோகன் அறிவிப்பு விடுத்துள்ளார். அத்தோடு ஐ.நா. பிரிதிநிதிகள் இஸ்ரேலுக்கு வருகை தருவதற்கான நுழைவிசைவு அனுமதியை வழங்கப் போவதில்லை எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளரின் கருத்து உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாக உள்ளது. பலஸ்தீனப் பிரச்சனையை ஓரளவேனும் அவர் உள்வாங்கிக் கொண்டுள்ளார் என்பது அவரது கருத்தில் தெளிவாகிறது. பலஸ்தீன மக்கள் 56 வருடங்களாக மூச்சுத்திணறும் ஆக்கிரமிப்புக்குள் உள்ளனர் என உலகின் உயர்ந்த மன்றமாகக் கருதப்படும் ஒரு அமைப்பின் பொதுச் செயலாளரிடம் இருந்து வந்துள்ள கருத்து உண்மையை உரைப்பதாக உள்ளது.
ஆனால், இத்தகைய வெற்றுக் கருத்துகளால் ஆகும் பயன்தான் என்ன? கள நிலவரத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படப் வாய்ப்பு உள்ளதா?
மேற்குலகின் தலைவர்களோ இஸ்ரேலுக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை பகிரங்கமாகவே வெளியிட்டு வருகின்றனர் அது மாத்திரமன்றி அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் நேரடியாக இஸ்ரேலுக்குச் சென்று தமது ஆதரவை தெரிவித்தும் உள்ளனர். அடுத்தடுத்து வேறு நாடுகளின் தலைவர்களும் இஸ்ரேல் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுவரை சென்று வந்தோரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மாத்திரம் மேற்குக் கரைக்குச் சென்று பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களைச் சந்தித்துள்ளார்.
தற்போதைய நிலையில் காஸா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் ஒன்று அதி அவசியமாக உள்ளது. ஏற்கனவே இறந்த மக்கள் போக, காயப்பட்ட மக்களையும், பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களையும் உயிரோடு காப்பாற்ற வேண்டுமானால் நிவாரணப் பொருட்கள் விரைந்து செல்ல வேண்டும். அயல்நாடான எகிப்தின் ஊடாக நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தாலும், அவை எல்லையைக் கடப்பதற்கு இஸ்ரேலின் அனுமதி தேவைப்படுகின்றது. இஸ்ரேல் மனது வைத்தால் மாத்திரமே நிவாரண வண்டிகள் அசைய முடியும் நிலையே அங்கு உள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றுக்கு உலக நாடுகள் மத்தியில் பேராதரவு இருக்கின்றது. ஆனால் ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பணயக் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அடம் பிடிக்கின்றது இஸ்ரேல். தன்னுடைய பிடிவாத நிலையில் இருந்து இஸ்ரேல் இறங்கி வருமா என்பது அடுத்துவரும் நாட்களிலேயே தெரிய வரும்.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.”போர் நிறுத்தம் என்பது மிகமிக முக்கியமானது. சாதாரண மக்களின் உயிர்கள் – அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் – காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு போர் நிறுத்தம் அவசியம். அதேபோன்று காஸா மீதான பொருளாதரத் தடைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். போர் நிறுத்தம் செய்வதற்கு பணயக் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற முன்நிபந்தனை ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. மக்களை துயரில் இருந்து விடுவிப்பதை இராணுவக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது” என்று கூறியுள்ளார் பைசல் பின் பர்ஹான் அல் சவுத்.
ஒக்டோபர் 7 தாக்குதல்கள் ஹமாஸ் மீதான உலகளாவிய கண்டனத்துக்கு வழிவகுத்து இருந்த போதிலும் பதிலுக்கு இஸ்ரேல் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களும், போர்ப் பிரகடன அறிவிப்பும் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இஸ்ரேலின் முன்னாள் நண்பர்கள் கூட தற்போது ஒரு போர் நிறுத்தம் அல்லது ஆகக்குறைந்தது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான மோதல் தவிர்ப்பு ஏற்பட வேண்டும் என அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
எந்தவொரு நாடும் தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்காகப் போருக்குச் செல்வது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயமே. ஆனால், தீவிரவாதிகளை ஒடுக்குகிறேன் எனக் கூறிக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வதை உலகம் அனுமதிக்காது, அனுமதிக்கவும் கூடாது.
இன்று காஸா மக்களுக்காக எழும் குரல்கள் தற்போதைய மோதலுக்கு ஏதோவொரு வகையில் முடிவு எட்டப்பட்டதும் ஓய்ந்துபோய்விடக் கூடாது என்பதே பலஸ்தீன மக்களதும், அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டோரதும் எதிர்பார்ப்பு. ஹமாஸ் தொடக்கிவைத்த சம்பவம் பல பத்தாண்டுகளாக நீடிக்கும் பலஸ்தீன மக்களின் சுதந்திரக் கனவை நிறைவேற்றுமானால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.