வவுனதீவு பிரதேச பெரும்போக விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம்.

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச பெரும்போக விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயித்தியமலை, மற்றும் மண்டபத்தடி கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் பெரும்போக பயிற் செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (18) வவுனதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
.
இதன்போது இப்பிரதேசத்தில் 32 ஆயிரத்தி 658.75 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்போக பயிற்செய்கை பண்ணப்படுவதற்கான முன்ஆயத்தங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மானிய உர விநியோகம் தொட்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ்விவசாய நிலங்களில் சிறு நீர்ப்பாசன குளங்கள் மூலமாக நீரைப் பெற்றுக் கொள்ளும் 1105 ஏக்கர் நிலத்திலும், பிரதான நீர்பாசன வசதியுள்ள 11 ஆயிரத்தி 401 ஏக்கர் நிலத்திலும், மானாவாரி 19 ஆயிரத்தி 586 ஏக்கர் நிலத்திலும், மேட்டு நில பயிற்செய்கையானது 566.75 ஏக்கரிலும் நெற்செய்கை மற்றும் மறுபயிர்; செய்கை பண்ணப்படவுள்ளது.
இப்பயிர் செய்கை நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இம்முறை மானியமாக வழங்கப்படும் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும், மறுபயிர் செய்கை பன்னுவதற்கு ஆர்வமூட்டப்பட்டதுடன், விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது
.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என். நாகராத்தினம், மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன், நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ். நிரோஜன், , விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன், கரடியணாறு விவசாய பயிற்சி நிலைய விவசாய பிரதிப்பணிப்பாளர் ஆர். சிவனேசன், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதிபன் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.