வவுனியாவில் ஹயஸ் மோதி மின்சார சபை ஊழியர் சாவு!

வவுனியா – மன்னார் வீதியில் பிரதேச செயலகத்துக்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள பாதைசாரி கடவைப் பகுதியில் வீதியோரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மாேதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்துக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றபாேதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வவுனியா – மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் என்பவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஹயஸ் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.