இலங்கைக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்களால் அபார வெற்றி.
பூனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
இப் போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போயுள்ளதுடன் ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு சொற்ப அளவில் அதிகரித்துள்ளது.
மேலும் இந்தப் போட்டி முடிவுடன் அணிகள் நிலையில் ஆப்கானிஸ்தான் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை 4 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. பஸால்ஹக் பறூக்கின் துல்லியமான பந்துவீச்சு, ரஹ்மத் ஷா, அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா ஷஹிடி, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் மற்றும் 3 சிறந்த இணைப்பாட்டங்கள் என்பன ஆப்கானிஸ்தானை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.
இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு தங்களது நம்பிக்கையை வளர்த்துக்கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். முந்தைய போட்டிகளில் பிரகாசித்த ரஹமானுல்லா குர்பாஸ் (0) முதலாவது ஓவரில் ஆட்டம் இழந்தபோதிலும் 2ஆம் 3ஆம் 4ஆம் விக்கெட்களில் பகிரப்பட்ட இணைப்பாட்டங்கள் ஆப்கானிஸ்தானின் வெற்றியில் பெரும் பங்காற்றியருந்தன.
இப்ராஹிம் ஸ்தரான், ரஹ்மத் ஷா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர். ஸத்ரான் 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ரஹ்மத் ஷா 3ஆவது விக்கெட்டில் மேலும் 58 ஓட்டங்களை ஹஸ்மத்துல்லா ஷஹிடியுடன் பகிர்ந்தார். ரஹ்மத் ஷா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 62 ஓட்டங்களைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ஹஸ்மத்துல்லா ஷஹிடி, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 67 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 63 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடனும் ஹஷ்மத்துல்லா ஷஹிடி 58 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னனதாக ஆப்கானிஸ்தான் களத்தடுப்பை தெரிவு செய்ததை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையாததுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆக்ரோஷம் தென்படவில்லை. ஏனெனில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஒரு கட்டத்திற்குப் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தனர். இன்னிங்ஸ் முழுவதும் அதனைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியமையே இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
இலங்கை இன்னிங்ஸில் 3 இணைப்பாட்டங்கள் பதிவான போதிலும் அவை கணிசமான எண்ணிக்கைகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இணைப்பாட்டங்கள் நல்ல நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கையில் முன்வரிசை வீரர்கள் அநாவசியமாக ஆட்டம் இழந்தனர்.
மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன (15) ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணியைக் கட்டி எழுப்ப பெத்தும் நிஸ்ஸன்கவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் முயற்சித்தனர். அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸும் சதீர சமரவிக்ரமவும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் குசல் மெண்டிஸ் அநாவசியமாக சிக்ஸ் அடிக்க முயற்சித்து 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 134 – 3 விக்.) அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. சதீர சமரவிக்ரம (36), சரித் அசலன்க (22), தனஞ்சய டி சில்வா (14) துஷ்மன்த சமீர (1) ஆகிய நால்வரும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (185 – 7 விக்.)
எனினும் 8ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸும் மஹீஷ் தீக்ஷனவும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை சற்று கௌரவமான நிலையில் இட்டனர். மெத்யூஸ், தீக்ஷன ஆகிய இருவர் மாத்திரமே இலங்கை சார்பாக இந்தப் போட்டியில் தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். தீக்ஷன 29 ஓட்டங்களையும் மெத்யூஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பஸால்ஹக் பறூக்கி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஜீப் உர் ரஹ்மான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.