ரயில் விபத்துக்கான காரணம் இதுதான் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரா, கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.
ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.
இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், போலீஸார், மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 13 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து, ஏழு பேர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு நடத்தி, முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த விபத்துக்கு, ராயகடா பயணியர் ரயிலின் டிரைவர், அவரது உதவியாளர் ஆகியோர் தான் காரணம். இருவருமே விபத்தில் உயிரிழந்து விட்டனர்.
விதிகளின்படி, பழுதடைந்த தானியங்கி சிக்னல்களில், ரயில் இரண்டு நிமிடங்கள் நின்று, பின், 10 கி.மீ., வேகத்தில் புறப்பட வேண்டும். இதை ராயகடா பயணியர் ரயில் பின்பற்றாததால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.