மத்திய அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக ஊடகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில், ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையின்போது அடுத்தடுத்து மூன்று முறை குண்டுகள் வெடித்தன. இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 60 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் சமந்தப்பட்ட டொமினிக் மாா்ட்டின் என்பவா் சில மணிநேரத்தில் காவல்துறையில் சரணடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் தளத்தில், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் சமாதான அரசியலின் விலையை, சமூகத்தின் அப்பாவி மக்களே சுமக்க வேண்டியுள்ளது. வரலாறு அதைதான் நமக்கு கற்று கொடுத்திருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு ஆதரவாக, வெறுப்பை பரப்பவும், கேரளத்தில் ஜிகாத் அமைக்கவும் அழைக்கின்றன. பொறுப்பற்ற முட்டாள்தனமான அரசியல்.” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கேரள முதல்வர் பினராயி விஜயனையும் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கேரள காங்கிரஸ் கமிட்டி அளித்த புகாரின் அடிப்படையில், ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள சைபர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.