காஸாவில் ஹமாஸ் தளபதி ஒருவரை கொன்றதாக இஸ்ரேல்: ஹமாஸ் மறுப்பு
காஸா பகுதியில் உள்ள நெரிசலான அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தாக்குதலில் குறைந்தது 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
காசாவின் மிகப் பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா மீதான வான்வழித் தாக்குதலில், தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நிலத்தடி சுரங்கப்பாதை வளாகத்தில் இருந்த ஏராளமான ஹமாஸ் போராளிகளும், பியாரியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் போராளிகள் அல்லாதவர்களின் உயிரிழப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹாசிம் காசெம், மூத்த தளபதி ஒருவர் முகாமில் இருப்பதை மறுத்ததோடு, பொதுமக்களின் கொலையை மறைக்க இஸ்ரேலின் கட்டுக்கதை என்றும் கூறினார்.
இந்த தாக்குதலில் குறைந்தது 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.