காசா மற்றும் எகிப்து இடையேயான ரஃபா எல்லை திறக்கப்பட்டது
காசா மற்றும் எகிப்து இடையேயான ரஃபா எல்லை கடந்த பல வாரங்களுக்கு பின் , நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது.
மேலும், காசாவில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறுவதற்காக காசாவிற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லைக் கடவை இன்று (நவம்பர் 1) மீண்டும் திறக்கப்படும் என்று “நம்பகமான தகவல்கள்” கிடைத்திருப்பதாக பிரிட்டன் முன்னதாக கூறியிருந்தது.
இதன்படி குறைந்தது ஏழு நோயாளிகளாவது இதன் வழியாக வந்துள்ளனர். காயமடைந்த 88 பாலஸ்தீனியர்கள் மற்றும் சுமார் 500 வெளிநாட்டினர் முதல் கட்டமாக வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.
காஸா பகுதியில் மீண்டும் தொடர்பாடல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன
காசாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு வழங்குநர், காசா பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் “முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன” என்றார். இதை காசாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுவலூஃப் உறுதிப்படுத்தினார். ஒரு வாரத்தில் இது இரண்டாவது தகவல் தொடர்புத் தடையாகும்.
செவ்வாய்க்கிழமை (அக். 31) காசா பகுதிக்குள் நடந்த தரைப் போரில் 11 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் காசாவை வானிலிருந்து தாக்குகிறது, மேலும் போர் தொடங்கியதில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாகக் கூறுகிறது.
ஹமாஸை குறிவைத்து செவ்வாய்க்கிழமை (அக். 31) வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா நகரைத் தாக்கியதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தின. இந்த தாக்குதல் காரணமாக டஜன் கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.
பலத்த தீக்காயங்களுடன் குழந்தைகள் காசா நகரில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக, அந்த மருத்துவமனையின் தன்னார்வ அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்களின் சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், காசா மீதான “ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற” தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக பொலிவியா அறிவித்தது.
பொலிவிய துணை வெளியுறவு மந்திரி ஃப்ரெடி மாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “காசா பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற இராணுவ தாக்குதலை நிராகரிப்பதற்கும் கண்டனம் செய்வதற்கும்” முடிவு எடுக்கப்பட்டது.
இதேபோல், கொலம்பியா மற்றும் சிலி தலைவர்களும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளனர்.
அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 326 ஆக உயர்ந்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதார அமைச்சகத்தின் படி, இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட காசா மக்களது எண்ணிக்கை 8,500 க்கும் அதிகமாக உள்ளது.