வீதியைப் புனரமைத்துத் தருமாறு வேண்டி வீதியை மறித்து கவனவீர்ப்புப் போராட்டம்.
வவுனியா, பண்டாரிக்குளம் பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி அப்பகுதி மக்களால் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல வருடங்களாக குறித்த வீதி எவ்வித புனரமைப்பும் இன்றி காணப்படுவதுடன், தற்போது குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் பாதையைப் பயன்படுத்துவதில் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவித்தமையுடன் உடனடியாக வீதியைச் செப்பனிட்டுத் தருமாறும் போராட்டக்காரர்கள் கோரினர்.
வவுனியா, பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி முன்பாக ஆரம்பமான இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் பண்டாரிக்குளம் பிரதான வீதியூடாக ஊர்வலமாகச் சென்று ரயில் நிலைய பிரதான வீதியைச் சென்றடைந்தது. அங்கு சிறிது நேரம் வீதியை வழிமறித்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ”3 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை அமைந்துள்ள பிரதான வீதியை உடனே புனரமைப்புச் செய், ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் ஏமாற்றாதே, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரே பதில் சொல் நிதி எங்கே?, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், நான்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் துன்பப்படுவது உங்களுக்குத் தெரியவில்லையா?” போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.