யாழ் பல்கலை பகிடிவதை தொடர்பில் நால்வருக்கு வகுப்புத் தடை

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இணையவழியிலான பகிடிவதை தொடர்பாக 4பேருக்கு உடனடியாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி நிமலதாசன் தெரிவித்தார்.
இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இம்சை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் முகாமைத்துவ பீட இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கான உடனடி நடவடிக்கையாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டு. பல்கலைக்கழக வளாகத்தில் நுழையாதவாறு தடை செய்யப்பட்டுள்ளனர்.
இம்சைச் சம்பவங்கள் தொடர்பில் துரித கதியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் இரண்டாம் வருட மாணவர்களின் இம்சைச் செயற்பாடுகளுக்கு உதவியதாக நம்பப்படும் முதலாம் வருட மாணவர்கள் இருவர் இனம்காணப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக இன்று காலை விடுதிகளை விட்டு வெளியேய்றப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான இம்சைப்படுத்தல்களுக்கு உட்படாமல் இருப்பதற்கு மாணவர்களுக்கு தெளிவுட்டல்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.