ஹமாஸ் 2 : இளைஞர்களை ஈர்த்த யாசினின் தத்துவம்

ஷேக் அகமது யாசின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் ஹமாஸை யாருக்கும் தெரியாது. அதேபோன்று, இவர் தலைமையேற்பதற்கு முன்னால் யார் யாரெல்லாம் தலைவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியாது. உண்மையைச் சொல்வதென்றால், பாலஸ்தீனத்தில் இப்போது வசிப்பவர்களுக்குக் கூட இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு அடக்க ஒடுக்கமாக இருந்த இயக்கம் அது. கணப் பொழுது மாயம் போலத்தான் அது நடந்தது.

யாசினின் வயது சுமார் ஐம்பது முதல் ஐம்பத்தைந்துக்குள் (அவரது பிறந்த தேதி உறுதியாகத் தெரியாது. 1929 என்றும் 1937 என்றும் சிலர் எழுதியிருக்கிறார்கள்). ஏதோ ஒரு வயதில் அவர் ஹமாஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பாதி வாழ்க்கை அதற்கு முன்பே முடிந்துவிட்டிருந்தது ஒரு பொருட்டல்ல. மைக் பிடித்துப் பேசிக்கொண்டிருந்த ஹமாஸைத் துப்பாக்கி பிடிக்கும் பாதைக்கு இட்டுச் சென்ற அம்மனிதரால் நடக்க முடியாது.

1948-ம் ஆண்டு முதலாவது அரபு-இஸ்ரேலிய யுத்தம் ஆரம்பித்தபோது பாலஸ்தீனத்தில் உள்ள அல் ஜுரா என்னும் கிராமத்திலிருந்து அகதிகளாக காசா பகுதிக்கு வந்து சேர்ந்த குடும்பம்தான் யாசினுடையது. அம்மா, நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். யாசினுக்கு மூன்று வயதாகியிருந்தபோது அவரது தந்தை இறந்தார். எனவே ஏழு பிள்ளைகளை வளர்க்க அவரது தாய் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அகதி முகாம் ஒன்றில் எப்படியோ இடம் பிடித்து, ரொட்டிக்குப் பிரச்னையில்லாமல் பார்த்துக்கொண்டார்.


அகதி முகாமில் இளமை பருவம்: 
யாசினின் இளமைப் பருவம் என்பது அகதி முகாமில்தான் கழிந்தது. பன்னிரண்டு வயதில் நண்பன் ஒருவனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு விபத்தில் யாசினுக்கு முதுகுத் தண்டில் காயம். கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலை ஏற்பட்டு நிரந்தரச் சக்கர நாற்காலிவாசி ஆகிப்போனது அப்போதுதான்.

 

விளையாட்டு இல்லாமல் போனதால் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினார். பள்ளிப் படிப்பை காசா அகதி முகாமில் இருந்தே முடித்துவிட்டு எகிப்து-கெய்ரோவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்றார். (எகிப்து அண்டை நாடென்றாலும் கெய்ரோ என்பது காசாவுக்குப் பக்கத்து ஊர்தான். ஒரு வண்டி பிடித்தால் சென்னையிலிருந்து திருச்சி போகும் நேரத்துக்குள் சென்றுவிடலாம்)

அப்போதெல்லாம் எகிப்து என்றால் நாசர். நாசர் என்றால் முஸ்லிம் சகோதரத்துவம். யாசினும் அதனால் கவரப்பட்டார். தமது பல்கலைக்கழக நாள்களில்தான் அவர் புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆயுதப் பயிற்சியும் அவருக்கு எகிப்தில்தான் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது குறித்து எந்த தகவலையும் மத்தியக் கிழக்கு சரித்திர ஆசிரியர்கள் யாரும் எழுதவில்லை. அதேபோன்று, அவர் மீண்டும் காசாவுக்கு வந்து எந்த இயக்கத்திலாவது இணைந்து பயிற்சி பெற்றதற்கான சான்றுகளும் இல்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்து எழுபதுகளின் இறுதி வரை பாலஸ்தீனத்தில் யாசர் அரஃபாத் என்கிற ஒரு பெரும் தலைவரைத் தவிர மக்களுக்கு வேறு யார் மீதும் நம்பிக்கை கிடையாது. அனைத்து பாலஸ்தீன் போராளிக் குழுக்களும் அரஃபாத்தின் முயற்சியால் ஒரு குடையின் கீழ் திரண்டு நின்று இஸ்ரேலுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தன. ஆனால் ஷேக் அகமது யாசீனுக்குத் தொடக்கம் முதலே யாசர் அரஃபாத்தின் அரசியல் ஆகாது.

இதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று உண்டு. யாசர் அரஃபாத் ஓர் அரபியாகவும் முஸ்லிமாகவும் இருந்தாலும், பாலஸ்தீன போராளி இயக்கங்கள் அனைத்துமே முஸ்லிம் இயக்கங்களாக இருந்தாலும், அரஃபாத் தமது போராட்டத்தை மதச்சார்பற்ற போராட்டமாகத்தான் முன்வைத் தார். மதமல்ல; இனமே அவரது அரசியலின் மையப் புள்ளி.

 

படித்த இளைஞர்கள்: மாறாக, ‘இது முஸ்லிம்களின் பிரச்னை’ என்று தீர்மானமாக நம்பி அதையே அழுத்தமாக வெளிப்படுத்தியவர் ஷேக் அகமது யாசின். எகிப்திலிருந்து திரும்பியது முதலே அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். எனவேதான் பாலஸ்தீனத்தில் அப்போது செயல்பட்டு வந்த எந்த ஓர் அமைப்புடனும் அவர் இணையவில்லை. அவர்களிடம் போர்ப்பயிற்சி பெறவில்லை. அரஃபாத்தின் வழி வெற்றிக்கு உதவாது என்பதே யாசினின் கருத்தாக இருந்தது.

தமது கருத்துக்கு நெருக்கமாக வரக்கூடியவர்களை அவர் சத்தமில்லாமல் தேடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். காசாவில் அப்போது பேச்சுப் புரட்சி ஏற்பட்ட சமயம். படித்த இளைஞர்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று யாசினுக்கு அப்போதுதான் தோன்றியிருக்க வேண்டும். அவர் இணைந்த பிறகுதான் ஹமாஸ் என்கிற பெயர் பிரபலமானது. அதனால்தான் ஹமாஸின் முதல் தலைவர் என யாசினை குறிப்பிடுகிறார்கள்.

எண்பதுகளின் இறுதியில் காசா பகுதியில் கிட்டத்தட்ட அத்தனை இளைஞர்களுமே தமது அரஃபாத் விசுவாசத்தை விலக்கிக்கொண்டு ஹமாஸை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். இது முழுக்க முழுக்க யாசினின் செயல்பாடுகளால் மட்டுமே சாத்தியமானது.

ஆயுதப் போராட்டம்தான் விடுதலைக்கு ஒரே வழி. ஆனால் தவறிக்கூட யாருடனும் கூட்டணி வைக்காதீர்கள் என்பதே அவர் ஹமாஸுக்கு சொல்லித்தந்த அடிப்படை பாடம். இந்த ‘யாருடனும்’ என்பது அரஃபாத்தையோ அவரதுபி.எல்.ஓவையோ மட்டும்குறிப்பதன்று.

 

யாசினுக்குஅடிப்படையிலேயே பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகள் எதன்மீதும் நம்பிக்கை இல்லை என்பதே அதன் வெளிப்பாடு. அது ஜோர்டான், சிரியா, லெபனான், சவுதி அரேபியா, எகிப்தும் ஆனாலும் கூட.

 

அதற்கு அவருக்கு ஒரு வலுவான காரணமும் இருந்திருக்கிறது. ஒரு போர். அதுவும் மிகக் கோரமான போர். அனைத்தையும் இழந்து, தாயுடனும் தம்பி, தங்கைகளுடனும் அவர் அகதியாக காசாவுக்கு ஓடி வந்ததற்குக் முக்கிய காரணமாக இருந்தது முதலாவது அரபு-இஸ்ரேல் போர். அப்போது அவருக்குச் சிறு வயதுதான்.யோசிக்கத் தெரிந்திருக்காது. ஆனால் பிறகு யோசித்துத் தெளிந்திருப்பார்.

ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சொந்த சுக சௌகரியங்கள்தாம் பெரிது. அதற்கு பங்கமில்லாமல் பார்த்துக்கொண்ட பிறகே பக்கத்து இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்லிக் கைகாட்டுவார்கள். எனவே சகோதரர்களே, நம்மை நாமேதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். யாரையும் நம்பாதீர்கள் என்பதே யாசினின் கோட்பாடு.

ஹமாஸ் அதன்பின் அந்த கோட்பாட்டின்படி தான் நடந்துகொள்ளத் தொடங்கியது. அந்தப் போரையும் அதன் விளைவையும் சிறிது தொட்டுக் காட்டினால் இது தெளிவாகப் புரியும்.

– பா.ராகவன்

(தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.