அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார். அதனால் அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல். இதற்கு முன்னதாக 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாவும் வருமான வரி சோதனை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது வருமான வரித் துறை. இதில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே போல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் தற்போது சிறையில் உள்ளார். இப்படியாக வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை சார்பில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் சோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.