‘ஆப்பிள்’ எச்சரிக்கை: மத்திய அரசு விசாரணை தொடக்கம்
எதிா்க்கட்சித் தலைவா்களின் கைப்பேசியை அரசு சாா்பில் ஒட்டுக்கேட்க முயற்சிப்பதாக ‘ஆப்பிள்’ நிறுவனம் எச்சரிக்கை அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசின் ‘சொ்ட்-இன்’ அமைப்பு விசாரணையைத் தொடங்கியிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களின் கைப்பேசியில் சட்டவிரோதமாக நுழைந்து தகவல்களைத் திருட அரசு ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்புகளால் முயற்சி நடைபெறுவதாக ‘ஆப்பிள்’ நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. இந்த எச்சரிக்கை செய்தியைத் தலைவா்கள் பலரும் சமூக ஊடக தளங்களில் பகிா்ந்து பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க எது தூண்டுதலாக இருந்தது என்பதைத் தெரிவிப்பது தாக்குதல் அமைப்புகளுக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, எச்சரிக்கை செய்திகளை வெளியிடுவதற்கான காரணம் குறித்து முழுமையான தகவலை எங்களால் வழங்க முடியாது’ எனத் தெரிவித்தது.
அரசியல் களத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்தாா். மேலும், 150-க்கும் மேற்பட்ட நாட்டு மக்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது ஏன் என ‘ஆப்பிள்’ நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறியிருந்தாா்.
இந்த நிலையில், ஆப்பிள் எச்சரிக்கை விவகாரத்தில் மத்திய அரசின் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக எஸ்.கிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், அவா் கூறுகையில், ‘இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு (சொ்ட்-இன்) தங்களின் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அந்நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம்’ என்றாா்.
இந்திய கணினி அவசரநிலை உதவிக் குழு என்பது நாட்டில் கணினிப் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியும்போது அதற்கான பதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அல்லது அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் நிறுவனம் ஆகும்.