மணிப்பூா்: ஆயுதக் கிடங்கு வன்முறை – நீடிக்கும் பதற்றம்
மணிப்பூா் மாநிலம் இம்பாலில் மணிப்பூா் துப்பாக்கிப் படையின் ஆயுதக் கிடங்கில் 2,000-க்கும் மேற்பட்டோா் ஆயதங்களை கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் நகரத்தில் பதற்றமான சுழல் தொடா்ந்து நிலவி வருகிறது.
மணிப்பூா் மாநிலத்தில் குகி- மைதேயி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் முதல் பிரச்னை தொடா்ந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில மோரே நகரத்தில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். இதையடுத்து இம்பால் நகரத்தில் ஆளுநா் மாளிகை மற்றும் மாநில முதல்வா் அலுவலகம் அருகில் உள்ள மணிப்பூா் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்குச் சொந்தமான ஆயதக் கிடங்கை சூறையாட 2,000-க்கும் மேற்பட்டவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். அவா்களை பாதுகாப்பு படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்தனா்.
இருப்பினும் நகரின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் தொடா்ந்து நிலவி வருவதால் மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டாலும் பொதுமக்கள் சட்ட விரோதமாக கூட்டம் கூடவோ அல்லது போராட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மோரே நகரில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டதைக் கண்டித்து குகி மாணவா் அமைப்பு சாா்பில் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.