‘இம்சை’யில் ஈடுபடும் மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவர்- யாழ். பல்கலை துணைவேந்தர் உறுதி

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’யில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள்.”
– இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய வழி பாலியல் பகிடிவதை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது பெரும்பான்மையின இரண்டாம் வருட மாணவர்களால் ஒன்லைனில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் பகிடிவதை தொடர்பில் 4 மாணவர்களுக்கு (2 ஆண்கள், 2 பெண்கள்) வகுப்புத் தடையுடன் பல்கலைக்கழகத்துள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தப் பாலியல் பகிடிவதைக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெரும்பான்மையின முதலாம் ஆண்டு சிங்கள மாணவர்கள் இருவர் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸுக்குப் பின்னர் விரிவுரைகள் ஒன்லைனில் நடக்கின்றன. பகிடிவதையும் ஒன்லைனுக்குச் சென்றுள்ளது.
பலாலி இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் தர அதிகாரியான உளவியல் பெண் வைத்தியர் ஒருவரின் சகோதரனும் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள். சட்டையைக் கழற்றி உடம்பைக் காட்டுவது மாத்திரமல்ல. அதற்கு மேலாகவும் கேட்கப்பட்டது.
இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை.
ஏற்கனவே பல்கலைக்கழத்தில் நடந்த மோதல் ஒன்றில், அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டினேன்.
பல்கலைக்கழகத்துக்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்குக்குட்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பகிடிவதையைத் தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.
பீடத்தில் இந்தச் சம்பவம் நடந்தால், பீடாதிபதி எமக்கு அறிவிப்பார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர், பிரதி சட்ட ஒழுக்காற்று அதிகாரி ஆகியோர் பீடாதிபதியுடன் இணைந்து அந்த விடயம் தொடர்பான ஆரம்ப அறிக்கையை 2 நாடகளுக்குள் வழங்க வேண்டும்.
அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை வழங்குவோம். அவர்கள் குற்றத்தின் அடிப்படையில் விடுதியிலிருந்தும் வகுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் மாணவர்கள் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். மாணவர் ஒழுக்காற்று சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்தக் குழு, மாணவனின் விளக்கத்தை ஆராய்ந்து, விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்குவார்கள்.
சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்புப் பட்டங்கள் பெற முடியாது. நான்காம் வருடக் கற்கையில் ஈடுபட முடியாது. சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்துக் கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள்.
பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்கள் மீது ‘இம்சை’யில் ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள்” – என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வணிக முகாமைத்துவ பீட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாங்கள் மிக வேகமாக ஆரம்ப கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அந்த விசாரணையின் அடிப்படையில் 10 மணித்தியால விசாரணையில் சந்தேகத்துக்குரிய வணிக முகாமைத்துவ பீட இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவியதற்காக – விசாரணையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் சிலரும் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த இம்சையில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்புக் கற்கை நெறி வழங்கப்படாது. ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிஸாரிடமும் முறையிடப்பட்டுள்ளது” – என்றார்.