டெல்லியில் தொடர்ந்து 3-ஆவது நாளாக ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்
டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை காற்றின் தரக்குறியீடு 504 புள்ளிகளை கடந்து ‘கடுமையான’ பிரிவில் தொடர்ந்தது.
டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் படி, தேசிய தலைநகர் டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 504 புள்ளிகளை கடந்து ‘கடுமையான’ பிரிவில் தொடர்ந்தது.
கடந்த சில தினங்களாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்த காற்றின் தரம் மூன்றாவது நாளாக சனிக்கிழமை ‘கடுமையான’ பிரிவுக்குச் சென்றது.
தொடர்ந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 571, திர்பூரில் 542, நொய்டாவில் 576, நொய்டா செக்டார்-116 இல் 426 ஆகவும், குருகிராமில் 512, நொய்டா செக்டார் 62 -இல் 428 ஆக பதிவாகியுள்ளது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வாகன உமிழ்வுகள் மற்றும் பயிா்க்கழிவுகளை எரிப்பது ஆகியவை காற்றின் தரம் மோசமானதற்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
தேசிய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு தொடர்ந்து ‘கடுமையான’ பிரிவின் கீழ் இருந்து வருவதால் மூச்சு திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பாளர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. தற்போது முகக்கவசம் அணிய வேண்டிய சூழலும் உள்ளது.
இந்த நிலையில், எம்சிடி-இன் குளிா்கால செயல்திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிவுகள் எரிப்பு, சட்டவிரோத கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகள், சாலைகளில் குப்பை கொட்டுதல், தூசி ஆகியவற்றைக் கண்காணிக்க 1,119 அதிகாரிகளைக் கொண்ட 517 கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று தர மேலாண்மை ஆணையத்தால் (டிஏக்யுஎம்) வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாகச் செயல்படுத்த மண்டல அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.