இஸ்ரேல் மோதலில் மேலுமொரு இலங்கைப் பிரஜை உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் இலங்கையைச் சேர்ந்த மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதான சுஜித் பண்டார யத்வார என்பவரே உயிரிழந்துள்ளார் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
சுஜித் பண்டார யத்வாரவின் மரணத்தை இஸ்ரேல் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்.
“இஸ்ரேலியப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் ஒன்றின் மரபணு மாதிரிகள் மற்றும் யத்வாரவின் பிள்ளைகளிடம் இருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளுடன் பொருந்தியிருக்கின்றமையை அடுத்து மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுஜித் பண்டார யத்வார ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டார் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது அவர் இறந்துவிட்டார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கைப் பிரஜை இவராவார்.” – என்றார்.
முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த அனுலா ரத்நாயக்க இஸ்ரேலில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது சடலம் கடந்த மாதம் 28ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்டது.