மன்னார் கடற்பரப்பில் சீனத் தூதுவர் ஆய்வு! – வடக்குப் பயணத்தின்போது திடீர் ஏற்பாடு.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மன்னார் கடற்பரப்புக்கு கடற்படையினரின் விசேட படகில் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் கடற்பரப்பிலுள்ள 5ஆம் மற்றும் 6ஆம் திட்டிப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
வடக்கு மாகாணத்துக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் தலா 500 பேருக்கு உதவிப் பொதிகளையும் வழங்கவுள்ளனர். சுமார் 6 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்தப் பொதிகள், பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு நாளை வரும் இந்தக் குழுவினர் மாலையில் நயினாதீவுக்குச் செல்லவுள்ளனர். அங்கு சீனாவிடம் வழங்கப்பட்டு இந்திய எதிர்ப்பால் மீளப் பெறப்பட்ட மின்உற்பத்தி திட்டப் பகுதியையும் சென்று இவர்கள் பார்வையிடவுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு மன்னாருக்குச் செல்லும் அவர்கள் எதிர்வரும் 8ஆம் திகதி மன்னார் கடல் திட்டுகளைப் பார்வையிடவுள்ளனர். அங்கு பெற்றோலிய வளம் இருப்பதாகக் கூறப்படும் நிலையிலேயே சீனத் தூதுவர் செல்லவுள்ளார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் 16 ஆம் திகதியும் மன்னாரிலுள்ள கடல் திட்டுக்களுக்கு சீனத் தூதுவர் சென்றிருந்ததுடன், “இதுவே முடிவு. ஆனால், ஆரம்பமும் கூட” என்று உள்ளர்த்தம் பொதிந்த வார்த்தைகளைக் கூறியிருந்தார் என்பதும், இந்தியா அது தொடர்பில் பாதுகாப்பு கரிசனைகளை எழுப்பியிருந்தமையும் நினைவுகூரத்தக்கது.