ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன ஹேப்பி நியூஸ்

80 கோடி ஏழைகளுக்கு உதவும் மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 4ஆம் தேதி தெரிவித்தார்.

“நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க பாஜக அரசு சார்பாக முடிவு செய்துள்ளேன். உங்களது அன்பும் ஆசீர்வாதங்களும் எப்போதும் புனிதமான முடிவுகளை எடுக்க எனக்கு பலத்தைத் தருகின்றன” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கும், மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் பிரச்சாரம் செய்த அவர், “மோடியின் உத்தரவாதம்” எனக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, லாக்டவுன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் ஸ்தம்பிதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவுபொருட்களை அரசு தனிநபர்களுக்கு இலவசமாக வழங்கியது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடியும் இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ நடவடிக்கை சில நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இது 2024 லோக்சபா தேர்தலுக்கான தந்திரம் என்று விமர்சிக்கப்படும் நிலையில் இது அரசியல் வாக்குறுதி அல்ல, இது மோடியின் உத்தரவாதம்” என்று பிரதமர் கூறியாது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி மானியம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமான இதன் மூலம் அனைத்துப் பயனாளிகளும் தங்கள் உணவுக்கான உரிமையைப் பெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் கவனம் செல்லுவதாக குறிப்பிட்ட பிரதமர், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ நடைமுறையில் இருப்பதால், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாகப் பெற முடியும் என்றும் கூறினார்.

மேலும் சத்தீஸ்கர் அல்லது வேறு எந்தப் பகுதியிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் உணவு பொருட்களைப் பெறலாம். “மோடியின் உத்தரவாத அட்டை இந்தியாவின் எந்த மூலையிலும் உங்களை பட்டினி கிடக்க விடாது” என்று அவர் கூறினார்.

தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருந்தபோதிலும், கூடுதல் இலவச உணவு தானியத்தை 28 மாதங்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் ஆறு முறை திட்டத்தை நீட்டித்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், அரசாங்கம் PMGKAY திட்டத்தை தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA) உடன் இணைப்பதாக அறிவித்தது.

இதன்மூலம் அதிக மானியத்துடன் கூடிய உணவு தானியங்களை ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாக்குவதாக அறிவித்தது. ஒரு வருடத்திற்கு (2023 காலண்டர் ஆண்டு) இலவச உணவு தானிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இப்போது பிரதமரின் அறிவிப்பு 2028 வரை திட்டத்தை தொடர்வது குறித்து பேசுகிறது.

Leave A Reply

Your email address will not be published.