பிரேக் பழுதாகி நடைமேடையில் ஏறிய பேருந்து: 3 பேர் பலி

ஆந்திரத்தில் பிரேக் பழுதாகி நடைமேடையின் மீது பேருந்து மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு இன்று காலை 8.20 மணிக்கு பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று நடைமேடையின் மீது ஏறியது.
பேருந்தின் பிரேக் பழுதானதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நடைமேடையின் மீது ஏறியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், ஒரு பெண், ஒரு சிறுவன் என 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒரு குழந்தை உள்பட சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.