இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழகத்தில் உண்ணாவிரதம்!
இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இலங்கையில் உள்ள 133 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தங்கச்சிமடம் – யாகப்பா பஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்தும், மீனவர்கள் கைது நடவடிக்கையைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக மீனவர்கள் இன்றும் நாளையும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லமாட்டார்கள் என்று இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராயா தெரிவித்தார்.