தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு முயற்சி: கூட்டமைப்பும் கூட்டணியும் நேரில் பேச்சு

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து ராஜபக்ச அரசின் அராஜங்களுக்கு எதிராகப் போராடும் முயற்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள இரண்டாம் கட்டச் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் பங்குகொண்டுள்ளனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அதன் தொடராக இன்று மாலை அடுத்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இளங்கலைஞர் மண்டபத்தில் தற்போது நடைபெறுகின்ற கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம், ரெலோ சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் சுரேன் சுரேந்திரன், புளொட் சார்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சிறீகாந்தா, ஈழமக்கள் சுயாட்சிக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோரும் பங்குகொண்டுள்ளனர்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகச் செயற்படும் பொ.ஐங்கரநேசனும் கலந்துகொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.