தேர்தல் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவர் – அநுர பகிரங்க எச்சரிக்கை.
“அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தோல்விப் பயம் காரணமாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அரசு ஒத்திவைத்துள்ளது.
உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும். எனினும், மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டும். எனவே, ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.
அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.
மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் ஏன் வீதிக்கு வருவதில்லை எனச் சிலர் கேட்கின்றனர். மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால் மக்கள் வீதியில் இறங்குவார்கள்.
அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை மாற்றியமைப்பதற்கான அனைத்து சக்திகளையும் தேசிய மக்கள் சக்தி அரவணைக்கும்.” – என்றார்.