ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த மேக்ஸ்வெல்.
இந்தியாவில் நடந்துவரும் 13ஆவது உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் பலவகைகளிலும் பல அணிகளுக்கும் பல வீரர்களுக்கும் முக்கியமானதாகத் திகழ்ந்து வருகிறது.
முந்திய சாதனைகள் பலவும் முறியடிக்கப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதிய தொடரின் முதல் போட்டியிலேயே அது தொடங்கிவிட்டது.
இன்னொரு பக்கம் முன்னாள் வெற்றியாளர்களும் பலம் பொருந்திய அணிகளும் சிறிய அணிகளிடம் தோற்று அதிர்ச்சி அளித்து வருகின்றன.
அவ்வகையில், ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் செவ்வாய்க்கிழ்மை மும்பையில் மோதிய போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.
கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பிலிருந்த ஆஸ்திரேலிய அணியை, ஒற்றையாளாக வெற்றிக்கரை சேர்த்தார் கிளென் மேக்ஸ்வெல்.
வினி இராமன் என்ற தமிழ்ப் பெண்ணை மணந்துள்ள இவருக்கு அண்மையில்தான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
292 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில் 91 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதனால், ஆப்கானிஸ்தான் அணி எளிதில் வென்று, இந்த உலகக் கிண்ணத் தொடரில் இன்னொரு வியப்பை அளிக்கப் போகிறது என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ‘நானிருக்க பயமேன்’ என்பதுபோல், தனியொருவனாக எதிரணிப் பந்துவீச்சைப் பதம் பார்த்து, இரட்டைச் சதம் விளாசி, கடைசிவரை களத்தில் நின்று, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் மேக்ஸ்வெல்.
அவர் 128 பந்துகளில் 201 ஓட்டங்களை எடுத்தார்.
அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இலக்கை விரட்டியபோது ஒருவர் இரட்டைச் சதம் அடித்தது இதுவே முதல்முறை.
சென்ற மாதம் 25ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதமடித்து, உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்திருந்தார்.
மறுமுனையில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்து, மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு, மேக்ஸ்வெல்லுக்கு நல்லாதரவும் ஊக்கமும் தந்தார்.
இருவரும் சேர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு 202 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
இறுதியில், 19 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே மூன்று விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று, ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
முன்னதாக, முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணியின் தொடக்க வீரர் இப்ராகிம் ஸத்ரான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைக் குவித்தார்.
உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் சதமடித்தது இதுவே முதன்முறை.