ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை.. ராகிங் பெயரில் கொடுமை செய்த சீனியர்ஸ்!
கோவையில் முதலாம் ஆண்டு மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி ராக்கிங் செய்த 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரின் விடுதி அறைக்கு சென்ற சீனியர் மாணவர்கள், அவரை தங்களது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி தாக்கியுள்ளனர்.
அப்போது மாணவரை ஆபாசமாக பேசி தாக்கியது மட்டுமன்றி டிரிம்மர் மிஷினை கொண்டு அவரின் தலையை மொட்டை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து தாக்கிய அவர்கள், அந்த மாணவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவரை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். பின்னர், இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தரணிதரன், வெங்கடேஷ் ஆகியோரையும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மாதவன்,மணி ஆகியோரையும் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஐயப்பன், சந்தோஷ், யாலிஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.