போனை எடுக்காத மனைவியை 230 கி.மீ. பயணம் செய்து கொன்ற காவலர்!
150 முறை போன் செய்து எடுக்காததால் கோபமடைந்த கணவர், 230 கி.மீ. பயணம் மேற்கொண்டு மாமியார் வீட்டில் இருந்த மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கிஷோர்(வயது 32). இவருக்கு ஹோசக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரதீபாவுடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், பிரதீபா அடிக்கடி நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை கண்ட கிஷோர், நீண்ட நாள்களாக பிரதீபாவுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஹோசக்கோட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்ற பிரதீபாவுக்கு கடந்த 12 நாள்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது.
பிரதீபாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிஷோர் போன் செய்தபோது வேறொரு காலில் பேசிக் கொண்டிருந்ததை அறிந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அழுதுக் கொண்டே இருந்தால் குழந்தைக்கு நல்லதல்ல எனக் கூறிய பிரதீபாவின் தாய், கிஷோரிடம் செல்போனில் பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பிரதீபாவுக்கு 150 முறை போன் செய்தும் பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த கிஷோர் இரவோடு இரவாக சாம்ராஜ்நகரில் இருந்து 230 கி.மீ. பயணம் செய்து மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு பிரதீபாவின் அறைக்குள் புகுந்த உள்புறமாக தாலிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, பிரதீபாவின் கழுத்தை நெறித்து கொலை செய்த கிஷோர், தான் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர், கிஷோரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிரதீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.