ஜனாதிபதிக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டுவர முடியும்! – சுமந்திரன் எச்சரிக்கை.
“சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வர முடியும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால் மூன்றாவது தடவையாகவும் அதன் பின்னரும் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் எதுவும் அரசமைப்புப் பேரவையால் உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்படவில்லை. இது அரசமைப்பு பேரவையின் சக உறுப்பினர்களுக்கும் தெரியும்.
பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக இரண்டு சந்தர்ப்பங்களில் தலா 3 மாதங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும், இரண்டாவது நியமனம் வழங்கப்படும் போது, அடுத்த நியமனம் நிரந்தர நியமனமாக இருக்க வேண்டும் என அரசமைப்பு பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது.
பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. எனினும், அதனை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க அரசமைப்பு பேரவைக்கும் அதிகாரம் உள்ளது. அரசமைப்பின் ஏற்பாட்டு விதிகளை வியாக்கியானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.” – என்றார்.
இதையடுத்து எழுந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, “பதவிக் காலம் முடிந்த பொலிஸ்மா அதிபருக்குத் தொடர்ந்தும் பதவி நீடிப்பு வழங்கப்படுகின்றது. எனினும் இதற்கு அரசமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. அதனால் பொலிஸ்மா அதிபரின் பதவி நீடிப்பு சட்ட ரீதியானது அல்ல. எனவே, இது தொடர்பில் அரசு நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.” – என்றார்.
இதற்குப் பதிலளித்த சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, “ஜனாதிபதியின் நியமனம் தொடர்பில் நாம் விவாதிக்க முடியாது” – என்றார்.
அப்போது மீண்டும் எழுந்த விமல் வீரவன்ச எம்.பி., “நீங்கள் ஜனாதிபதியின் பிரதிநிதி அல்ல. எனவே, நீங்கள் இது தொடர்பில் பதிலளிக்கத் தேவையில்லை. இங்கு பிரதமர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உள்ளார்கள். அவர்கள் பதிலளிக்க முடியும்” – என்றார். ஆனால், எவரும் பதிலளிக்கவில்லை.
இதன்போது எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “சட்டத்தின் அடிப்படையில் தற்போது நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லை. ஜனாதிபதி வேண்டுமென்றே அரசமைப்பை மீறி பதவி முடிந்த பொலிஸ்மா அதிபருக்குப் பதவி நீடிப்பை வழங்கி வருகின்றார். எனவே, அரசமைப்பை மீறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு வரமுடியும்.” – என்றார்.