ரணில் அரசு விரைவில் கவிழ்ந்தே தீரும்! – அடித்துக் கூறுகின்றார் சஜித்.

ஊழல், மோசடிகளைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆளும் தரப்பில் இருந்துகொண்டு மக்கள் நலன் கருதிச் சிந்திப்பவர்கள் தாமதிக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் (09) ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று அரசியலிலும் ஊழல், மோசடி. விளையாட்டிலும் ஊழல், மோசடி. அரசின் நாளாந்த நடவடிக்கைகளிலும் ஊழல், மோசடி. இவை அனைத்துக்கும் முடிவுகட்ட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வெகுவிரைவில் ஆட்சிப்பீடம் ஏறும்.” – என்றார்.