ஆதித்தியன் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!

15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் மூவரையும் நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் இன்று விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தாலே அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கனகரத்தினம் ஆதித்தியன், யோகராஜா நிரோஜன் மற்றும் சுப்பிரமணியம் சுரேந்திரராஜா ஆகிய மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி வாகனத் தொடரணி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் அலி முகமதுவைப் படுகொலை செய்யச் சதி செய்யப்பட்டது எனக் குற்றம் சாட்டப்பட்டடே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.