குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரது வாடகை வீடுகள் அவர்களுக்கே உரித்தாகிறது – ஜனாதிபதி.
பல்வேறு நகரசபை வேலைத்திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்காக அறவிடப்படும் வாடகை , இனிமேல் முற்றாக நிறுத்தப்படும் எனவும் , அந்த வீடுகளின் முழு உரிமையும் இன்று முதல் அந்தந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (நவ.13) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிய அவர், பல்வேறு நகரசபைத் திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு, அந்தக் குடும்பங்களிடம் இருந்து மாத வாடகையாக சுமார் 3,000 பெறப்படுவதாகக் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 50,000 குடும்பங்களுக்கு சொந்த வீடு உரிமை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கான காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்கும் வேலைத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போது நாட்டில் வாழும் 70% மக்கள் காணி மற்றும் வீடுகளின் வாரிசுகளாக மாறுவார்கள் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.