‘நாங்கள் 20 ஆவது திருத்தத்ததுக்கு எதிராக இருக்கிறோம்’ : மனோ கணேசன்
20 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன என்று கொழும்பு மாவட்ட எம்.பி. மனோ கணேசன் தெரிவித்தார்.
“இது 18-பிளஸ். ஆனால் எங்கள் மாற்றுத் திட்டம் 19-பிளசுக்கும் அதிகமானதாக இருக்கும் ”என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் மக்கள் ஐக்கிய சக்தியின் (SJB) முக்கிய பங்காளியுமான கணேசன் வெள்ளிக்கிழமை இரவு ஒரு நேரடி ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கூறினார்.
2010 இல் சட்டவாக்கத்தில் திணிக்கப்பட்ட 18 ஆவது திருத்தம், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு (தற்போதைய பிரதமர்) பலத்தை கொடுத்தது, ஆனால் 2015 இல் பதவியேற்ற அரசாங்கம் 19 ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்ததன் மூலம் அந்த மாற்றங்களை மாற்றியது என்று கணேசன் பேட்டியின் போது விளக்கம் அளித்தார்.
2015-2019 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் ஒரு முக்கிய அமைச்சரவை அமைச்சராக இருந்த கணேசன், மக்களின் சிவில் உரிமைகளை நசுக்குவதில் 18 வது திருத்தத்தை விட 20 வது திருத்தம் மோசமாக இருக்கக்கூடும் என்று கவலை தெரிவித்தார்.
“நாங்கள் 20 வது திருத்தத்துக்கு எதிரானவர்கள்” எனக் கூறிய அவர் , தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் இப்போது “கலாச்சார மற்றும் அரசியல் அதிர்ச்சியை” சந்திக்கின்றனர் என்றார்.