அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.

கடலரிப்பினால் கரையோரப் பிரதேசங்கள் காவு கொள்ளப்படுகிறது

கரையோரப் பிரதேசங்கள் பலவற்றை காவு கொண்டிருக்கும் கடலரிப்புப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நஷ்டஈடு எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்திற்குட்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கான உரிய நஷ்டஈடுகள் விரைவில் வழங்கப்பட வழிசெய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்  (15) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத தலைமையின் கீழ் அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொல்பொருள் சம்பந்தமான அதிகாரிகள் குறித்த பிரதேசத்தின் தவிசாளருக்கோ அல்லது பிரதேச செயலாளருக்கோ அறிவிக்காமல் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டத்துக்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் உரிய அனுமதிகள் பெறாது பல இடங்களை இலக்கு வைத்தாற் போன்று தொல்பொருள் அதிகாரிகள் திடீர் விஜங்கள் மேற்கொண்டு களஆய்வு செய்வதானது பொதுமக்களிடையே அனாவசியமான அசிரத்தைகளை ஏற்படுத்துகிறது எனவும் இதற்கான கட்டுப்பாடுகள் முறையாக பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மலினப்பட்டு வரும் போதைப் பொருள்கள் சமூக சீர்கேட்டை மிக துரித கதியில் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதற்கான உரிய சட்ட நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ள வழிசெய்யவேண்டும்.

அண்மைக்காலமாக பொதுமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் யானை படையெடுப்பினால் பல பொருள் சேதங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருவதாகவும் இதற்கான குறுகிய கால மற்றும் நெடுங்கால திட்டங்களை விரைவாக அமுல்படுத்தவும் கோரிக்கை விடுத்தார்.

சென்ற அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்டத்தினால் வீடில்லாத பல மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை பணம் வழங்காதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.