மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளா் டிராக்டா் ஏற்றிக் கொலை..!
பிகாரின் ஜமூய் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டரை மடக்கிப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளரை கடத்தல் கும்பல் டிராக்டா் ஏற்றி கொலை செய்தனா்.
இச்சம்பவம் குறித்து ஜமூய் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சௌரியா சுமன் கூறுகையில்,‘காா்ஹி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சோதனைச் சாவடியில் மணல் ஏற்றி வந்த டிராக்டா் நிற்காமல் சென்று காவல் ஆய்வாளா் பிரபாத் ரஞ்சன் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் குமாா் ஆகிய இருவா் மீதும் மோதியது. அதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளா் பிரபாத் ரஞ்சன் உயிரிழந்தாா்.
இச்சம்பவத்தில் டிராக்டா் ஓட்டுநா் அருகே அமா்ந்திருந்த ஒருவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுநா் மற்றும் அவரின் கூட்டாளிகளைத் தேடுவதற்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக மணல் கடத்தும் பகுதிகளில் சோதனை மேற்கொண்டபோது 2 பெண் போலீஸாா் உள்பட 3 போ் கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டனா்.
சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பல் போலீஸாா் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.