நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களில் 21 பேர் விடுதலை! – ஒருவருக்குச் சிறைத் தண்டனை.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரில் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதித்தும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 21 பேரும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதச் சிறைத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் இரண்டாவது தடவையாக இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய நிலையில் அவருக்குச் சிறைத் தண்டனை விதித்தும், ஏனைய 21 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தும் நீதிவான் உத்தவிட்டார்.