சச்சினின் 2 உலக சாதனையை தகர்த்த கோலி.
உலகக் கோப்பை 2023 முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நாக்அவுட் சுற்றில் இந்தியா முதலில் களமிறங்கிய 5 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இரண்டாவது களமிறங்கிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டும்தான் பெற்றது. இதன்மூலம், இன்று இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதப்பட்டது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில், வழக்கம்போல கேப்டன் ரோஹித் ஷர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். ரோஹித் ஷர்மாவுக்கு ஏற்றார்போல் நியூசிலாந்து பௌலர்களும் ஷார்ட் பால்களை வீசி சொதப்பினார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு ரோஹித் ஷர்மா 29 பந்துகளில் தலா 4 பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து 47 ரன்களை எடுத்து, சோதியின் வேகம் குறைந்த பந்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அடுத்து, ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமாக விளையாடி வந்தார்கள். இந்நிலையில், ஷுப்மன் கில் அரை சதம் கடந்து விளையாடியப் பிறகு, அவருக்கு காலில் வலி ஏற்பட்டது.
ஷுப்மன் கில் பெவிலியன் திரும்பியப் பிறகு விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால், ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், விராட் கோலி 106 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் 50ஆவது சதத்தை பூர்த்தி செய்து பிரமிக்க வைத்தார். மறுபக்கம் ஷ்ரேயஸ் ஐயரும் அரை சதம் அடித்ததால், இந்திய அணி 42 ஓவர்களிலேயே 300 ரன்களை கடந்து அசத்தியது.
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தோர் லிஸ்டில் சச்சினை (49) பின்னுக்கு தள்ளி, கோலி 50 சதங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 31 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
உலகக் கோப்பையில், ஒரு சீசனில் அதிக ரன்களை அடித்தவராக சச்சின் இருக்கிறார். 2003-ல் 673 ரன்களை அடித்திருந்தார். அந்த சாதனையையும் கோலி தகர்த்து 674+ ரன்களை சேர்த்து விளையாடி வருகிறார்.